பெரும்பாறை மலைக்கிராம பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்த 3 ஆசிரியர்களுக்கு 'மெமோ' வழங்கி திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர்
நடவடிக்கை எடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் 79 ஊராட்சி ஒன்றிய, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் உரிய நேரத்தில் செல்வதில்லை.
சிலர் பள்ளிக்கே செல்லாமல், பணிக்கு வந்ததாக கணக்கு காட்டுவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் பெருமாள்மலை, தாண்டிக்குடி, சீனிவாசபுரம், கார்மேல்புரம், பெரும்பாறை, பூம்பாறை, குண்டுபட்டி உள்ளிட்ட 16 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'
பெரும்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் சென்றார். அங்கு தலைமை ஆசிரியர் ராஜராஜன், ஆசிரியர்கள் சவேரியார், ஜான் பீட்டர் ஆகியோர் பணிக்கு வரவில்லை. காலை 10:30 மணி வரை காத்திருந்தும் ஆசிரியர்கள் வரவில்லை. அவர்களுக்கு பதிலாக, ஆசிரியர் அல்லாத பெண் ஒருவர் பள்ளியை கவனித்து வந்தார்.
அந்த
பெண்ணுக்கு இங்கு வேலை செய்யும் மூன்று ஆசிரியர்களும் தலா ரூ.500 வீதம், ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்குவதும், அவர் பள்ளியில் குழந்தைகளை கவனித்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேருக்கும் விளக்கம் கேட்டு 'மெமோ' வழங்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.