இந்தியா முழுவதும் அமைந்துள்ள 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் (ஐஐடி) ,
பெங்களூரூவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும்
(ஐஐஎஸ்சி) ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும்
கல்வி உதவித்தொகையாக 70,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் மனித
வளத்துறை அறிவித்துள்ளது.
'இந்திய தொழில்நுட்ப கழகங்களிலும், இந்திய அறிவியல் ஆராய்ச்சி
நிறுவனத்திலும் தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர்கள் ஒவ்வொரு
மாதமும் 25,000 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இனி, இவர்களுக்கு
ஆராய்ச்சி கல்வி உதவித்தொகையாக ஐந்து ஆண்டுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு
மாதமும் 70,000 ரூபாய் வழங்கப்படும்' என்று மனித வளத்துறையின் உயர்கல்வி
துறை செயலர் கெவல் குமார் சர்மா தெரிவித்து இருக்கிறார்.
இவர் 'தகுந்த உதவித்தொகை வழங்கப்படாததால் மாணவர்கள் வெளிநாட்டுக்குச்
சென்று ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இனி, தகுந்த கல்வி உதவித்தொகை
வழங்கப்படுவதன் மூலம் இந்தியாவிலேயே ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். இதன்மூலம்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மேம்பாடு அடையும். இந்த உதவித்தொகை
பிரதமர் நரேந்திர மோடி ஆராய்ச்சி உதவித்தொகை என்ற பெயரில் வழங்கப்படும்.
இதற்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்' என்று தெரிவித்து இருக்கிறார்
கெவல் குமார் சர்மா.