Breaking News

தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி, பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ., என, பல துறைகளின் கீழ், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இடம் மாறுதல், விடுப்புகளை சரிசெய்தல், பாஸ்போர்ட் வாங்க அனுமதி, பி.எப்., மற்றும் பதவி உயர்வு பெறுவதுஎன, அனைத்து வகையான பணிகளுக்கும், கல்வி அலுவலக பணியாளர்களையும், மேலதிகாரிகளையும், 'கவனிக்க' வேண்டியதுகட்டாயம். இதில் சிலஅதிகாரிகளும், பணியாளர்களும் மட்டும் விதிவிலக்கு.இந்த வகையில், தற்போது,10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை, 5ம் வகுப்பு வரை, தொடக்கக் கல்வி அதிகாரியான, ஏ.இ.இ.ஓ., பிறப்பிக்கிறார்; 10ம் வகுப்பு வரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,வும், அதற்கு மேல், சி.இ.ஓ.,வும் பிறப்பிக்கின்றனர்.
இந்தாண்டு இந்த தேர்வு நிலை அந்தஸ்தை பெற, ஆசிரியர்கள் தங்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலமும் தேவையானவற்றைகவனித்துவருகின்றனர்.ஆனால், மதுரை மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர், நேற்று முன்தினம், அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கிஉள்ளார்.
இதனால், திக்குமுக்காடி போன ஆசிரியர்கள் வந்த காரியம் இவ்வளவு எளிதில் முடிந்துவிட்டதே' என, ஆச்சர்யமடைந்து, அந்த அதிகாரிக்கு பரிசளிக்க நினைத்துள்ளனர். அதையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல், 'பள்ளிக்கு சென்று சிறப்பாக கல்வி பணியாற்றுங்கள்' என, அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். இந்த தகவல், ஆசிரியர்களின் மொபைல் போன்களில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற வண்ணம் உள்ளது