Breaking News

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:ஆக., மாத இறுதியில் வெளியீடு


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.


கமிஷன் தீவிரம்:இவற்றில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளனர்.ஊரக உள்ளாட்சிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியதலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
உள்ளனர். இவர்களின் பதவிக் காலம், வரும் அக்., மாதத்துடன் முடிகிறது. எனவே, அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.

இதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்ட வாரியாக, தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடக்கவுள்ளன. இதையடுத்து, தேர்தல் தேதியை ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

ஆலோசனை:இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சட்டசபையில், புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. தொடர்ந்து மானிய கோரிக்கை விவாதங்கள் ஒரு மாதம் வரை நடக்கும். ஆக., 15ம் தேதிக்குள் இப்பணிகள் நிறைவு பெறும்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் இறுதியில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட ஏற்பாடு
நடக்கிறது. தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலை போலவே, இந்த தேர்தலையும், இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஓட்டு சீட்டு முறையையும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்