திருவாடானை அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு, ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு ஆசிரியரும் உள்ளனர்.
தமிழக அரசு மாணவர்கள் படிப்பதற்காக பாடப் புத்தகம் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக கொடுக்கும் பட்சத்தில் கல்வியில் தரமில்லை என காரணம் கூறி, இந்தப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதால் அரசுப் பள்ளிகள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது.
இதுகுறித்து திருவாடானை உதவி தொடக்கக் கல்வி அதிகாரி வாசுகி கூறும்போது, நாச்சியேந்தல் பள்ளியில் ஒரு வாரத்தில் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவாடானை பகுதிகளில் மாணவர்கள் சேர்க்கையின்மை காரணமாக கீழக்கோட்டை, டி.கிளியூர், அணிக்கி, அறிவித்தி ஆகிய கிராமங்களில் இருந்த அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.