நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது அங்கு ஒரு பறவை தெரியலாம். அல்லது விமானம் தெரியலாம்! இரவு வானில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தெரியலாம்.
ஆனால் ஒரு சிரித்த முகம்? வாய்ப்பே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் Smiley என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிரித்த முகம் தெரிகின்றது என்றால் வியப்பாக இல்லையா? உண்மையில் இது வெறும் கண்களுக்குத் தெரியும் ஒரு தேவதையோ அல்லது ஆவியோ என சந்தேகிக்கத் தேவையில்லை.
இது ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கிய SDSS J1038+4849 எனப் பெயரிடப் பட்டுள்ள மிகப் பெரிய காலக்ஸி கிளஸ்டர் (galaxy cluster - கூட்டு அண்டங்கள்) இன் வடிவமைப்பு ஆகும். இந்த காலக்ஸி கிளஸ்டரானது மிகப் பிரகாசமான இரு மஞ்சல் நிறக் கண்களையும் முகம் மற்றும் சிரிக்கும் வாய் போன்ற வடிவத்தில் வளைந்த கோடுகளையும் கொண்டு அப்படியே ஓர் ஸ்மைலி போல் ஹபிள் (hubble) தொலைக்காட்டி எடுத்த புகைப் படத்தில் சிக்கியுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் அதிகமாக எமது பூமியைச் சுற்றி வரும் ஹபிள் விண் தொலைக்காட்டி எமது பிரபஞ்சத்தில் பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு வரையுள்ள மிக இரகசியமான இருண்ட உலகங்களைப் படம் பிடித்து இதுவரை பல ஆயிரக் கணக்கான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
ஹபிளின் தகவல் கிடங்கில் இந்த ஆயிரக் கணக்கான புகைப்படங்களும் சேகரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் இந்த ஸ்மைலி ஜூடி ஸ்மிட் என்பவரால் இனம் காணப் பட்டிருந்தது. இந்த சிரித்த முகத்தில் தெரியும் பிரகாசமான இரு கண்களும் உண்மையில் மிகத் தூரத்திலுள்ள இரு அண்டங்கள் (galaxies) ஆகும். அப்படியானால் அந்த சிரித்த அடையாளம்? அது வேறொன்றுமில்லை, மிக வலிமையான ஈர்ப்பு வில்லை வளைவு (Strong gravitational lensing) எனப் படும் விளைவால் ஏற்பட்ட ஒளிச்சிதறலே அந்த வளைவான கோடுகள் என வானியலாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த விளைவு எவ்வாறு ஏற்படுகின்றது எனில் இரு அண்டங்களுக்கு இடையே ஈர்ப்பு இழுவை மிக மிக உறுதியாகும் போது அது தன்னைச் சுற்றியுள்ள காலத்தையும் வெளியையும் சிதைப்பதால் எனக் கூறப்படுகின்றது. மேலும் ஸ்மைலி போன்ற வடிவங்களை ஏற்படுத்தும் இவ்வாறான வளைய வடிவிலான ஒளிக் கட்டமைப்புக்கள் 'ஐன்ஸ்டீன் வளையம்' (Einstein ring) என வானியலாளர்களால் அழைக்கப் படுகின்றது. ஏனெனில் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை இதுபோன்ற மர்ம விண்வெளி உணர்வுச் சித்திரங்களது (space emoticon) தன்மையையும் தெளிவாக விளக்கப் படுத்தக் கூடியது என்பது குறிப்பிட்டத்தக்கது.