Breaking News

கம்ப்யூட்டர் பகுதி - வேர்ட் டிப்ஸ்…டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க

டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், பலவகையான இடைவெளிகளை (breaks) உருவாக்கலாம். நாம் தொடர்ந்து டாகுமெண்ட் ஒன்றில் டைப் செய்கையில், வேர்ட் நாம் ஒரு பக்கத்தின் எந்த இடத்தில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுமையானவுடன், தானாக அடுத்த பக்கத்தினை உருவாக்கி, நாம் டைப் செய்வதனை தொடர்ந்து மேற்கொள்ள உதவிடுகிறது. டாகுமெண்ட் Normal வியூவில் இருந்தால், இந்த இடைவெளி சிறிய இடைக்கோடாகக் காட்டப்படும்.

ஆனால், இது அச்சிடப்பட மாட்டாது. ஆனால், சில வேளைகளில், பக்கம் இறுதிவரை செல்லாத போதும், அந்த பக்கத்தினை முடித்து, அடுத்த பக்கம் செல்ல விரும்புவோம். இதற்கு நாமே பேஜ் பிரேக் அமைத்திட, வேர்ட் வழிகளைத் தருகிறது. வேர்ட் தரும் வேறு சில பிரேக் வசதிகளையும் இங்கு காணலாம்.
1. Page break: தொடரும் டெக்ஸ்ட்டினை அடுத்த புதிய பக்கத்தில் அமைத்திட இது உதவும்.
2. Column break: தொடர்ந்து டைப் செய்திடும் டெக்ஸ்ட்டை, அடுத்த நெட்டு பத்தியில் முதல் வரியில் அமைத்திட இதனைப் பயன்படுத்தலாம்.
3. Section break: நம் டாகுமெண்ட்டில், புதிய தொரு பிரிவில் டெக்ஸ்ட் அமைத்திட இந்த பிரேக் உதவும். இதில் நான்கு வகை Section break உள்ளன.
4. Text-wrapping break: இது ஏறத்தாழ லைன் பிரேக் போல அமையும். இது டெக்ஸ்ட்டினைப் பிரித்து அடுத்த வரியில் புதிய டெக்ஸ்ட் அமைக்க உதவும். பொதுவாக கிராபிக்ஸ் கலந்து டெக்ஸ்ட் அமைக்கும்போது, அதனைச் சுற்றி அமைக்கபடும் டெக்ஸ்ட் பிரித்து சரியாக அமைக்க இது உதவும்.
5. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், பிரேக் அமைக்க கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
6. எந்த இடத்தில் பிரேக் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.
7. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
8. Page Setup குரூப்பில்ல் Breaks டூலின் மீது கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் பலவகையான பிரேக் அமைத்திட ஒரு பட்டியலைத் தரும்.
9. எந்த வகை பிரேக் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
டேபிளை நகர்த்தும் வழி: வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் டேபிள்களை எளிதாக, மொத்தமாக இன்னொரு இடத்திற்கு நகர்த்தி அமைக்கும் வழி தரப்பட்டுள்ளது. எப்படி டாகுமெண்ட்டில் உள்ள கிராபிக்ஸ் படங்களை நகர்த்துகிறோமோ, அதே போல, டேபிளையும் நகர்த்தலாம்.
இதற்கு, டேபிள் உள்ளாக, கர்சரை நிலை நிறுத்தவும். கிளிக் செய்திட வேண்டும். அங்கு கர்சரை நிறுத்தினால் போதும். இப்போது, டேபிளின் இடது மேல் மூலையில், ஒரு சிறிய ஐகான் தோன்றும். இது சிறிய சதுரம் ஒன்றில், நான்கு திசையிலும் அமைக்கப்பட்டிருக்கும் அம்புக் குறிகளைக் கொண்டிருக்கும். இந்த ஐகான் மீது கிளிக் செய்து, அப்படியே இழுத்தால், டேபிளை முழுமையாக இழுத்துச் செல்லலாம். நீங்கள் விருப்பப்படும் இடத்தில் கொண்டு போய், டேபிளை அமைக்கலாம்.