Breaking News

கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்


கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.கற்பித்தலின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது:

இன்றைய சூழலில் ஏராளமான இளைஞர்கள் ஆங்கிலத்தில் தகவல்தொடர்பு திறன் இல்லாததால் தங்களது பணியிடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, தலைமைப் பண்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் இந்தத் திட்டம் "பேஷனேட்' அறக்கட்டளை சார்பில் 100 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 10 மாநகராட்சிப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் இப்போது தொடங்கப்படுகிறது. 


இந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம், பேசும் பயிற்சி, மொழிப் புலமை ஆகியவை வழங்கப்படும். 100 தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பயிற்சியைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ளனர். இந்த அறக்கட்டளையும், தன்னார்வலர்களும் கிராமப்புற மாணவர்களுக்கும் ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும் என்றார் ஆளுநர் ரோசய்யா.