சென்னை,:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முழுமையாக மேற்கொள்ள, வாக்காளர் சிறப்பு முகாமை கூடுதலாக, ஒரு நாள் நடத்த, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த மாதம், 15ம் தேதி துவங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் சேர்க்கும் பணி நடக்கிறது.'வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.அதன்படி, முதல் முகாம், கடந்த மாதம், 20ம் தேதி நடந்தது. இரண்டாவது முகாம், நாளை அனைத்து வாக்குச் சாவடிகளிலும், நடக்கிறது. இந்நிலையில், கூடுதலாக, ஒரு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன்
அனுமதி வழங்கி உள்ளது. எனவே, வரும், 11ம் தேதி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.