வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு (இ.எஸ்.எல்.சி.) முடிவுகள் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் அக்டோபர் 8 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது பதிவு எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் வழங்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 80 சதவீத வருகைப் பதிவு இருக்கும் தனித்தேர்வர்கள் மட்டுமே அறிவியல் பாட செய்முறை, எழுத்துத் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.