Breaking News

மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் .திருப்பத்தூர் பதற்றம்!! பின்னணி என்ன?

 திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சிமோட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், குனிச்சு மோட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆங்கிலம் ஆசிரியர் விஜயகுமார் இசைக்கருவிகள் குறித்து பாடத்தை நடத்தியுள்ளார். அப்போது பறை இசைக்கருவியை வாசிப்பவர்கள் மிகவும் கேவலமான சாதியில் பிறந்தவர்கள் என்று விஷத்தை விதைத்துள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அந்த மாணவனின் புத்தகத்தில் சாதியை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இது குறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்ததுடன், தன்னை வேறு பள்ளிக்கு மாற்றுமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து, பெற்றோர் பள்ளியில் வந்து கேட்டபோது, 'உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்' என்று விஜயகுமார் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் , விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இன்று ஆசிரியர் விஜயகுமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறிபள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி வட்டாட்சியர் நவநீதம் மற்றும் கந்திலி போலீசார், ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கந்திலி காவல் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் ஆசிரியர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார்.

ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும், நல்ல பண்பாட்டையும் மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஜாதி பெயரை புத்தகத்தில் எழுதி வைத்ததை என்ன வென்று சொல்வது?