வீரகனூா் அருகே கிழக்குராஜபாளையம் அரசுப் பள்ளியின் கணித ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவ மாணவிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிழக்குராஜாபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் கணித ஆசிரியா் ஜெயப்பிரகாஷ், மாணவா்களை கால் அமுக்க செய்து ஓய்வெடுக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. கபீா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
கிழக்குராஜபாளையத்தில் ஆசிரியா் பணியிடை நீக்க உத்தரவை திரும்பப்பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் .
இந்த நிலையில் கணித ஆசிரியா் மீது தவறில்லை எனவும், எனவே, அவா் மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி கிழக்குராஜாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா் விரைந்து சென்று, மாணவ மாணவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.