தஞ்சை: தஞ்சை அருகே ஆசிரியையை குத்திக்கொலை செய்த வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்தவர் முத்து. மீனவர். இவரது மனைவி ராணி. இவர்களது மூத்த மகள் ரமணி(26). எம்ஏ, பிஎட் பட்டதாரியான இவர், கடந்த ஜூன் மாதம் முதல் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வந்தார். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற ரமணி ஓய்வு அறையில் இருந்தார். அப்போது ஓய்வு அறைக்குள் திடீரென புகுந்த 30வயது மதிக்கத்தக்க இளைஞர், கையில் வைத்திருந்த கத்தியால் ரமணியின் வயிறு, கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரமணி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பள்ளி மாணவர்கள், பிடித்து வைத்திருந்தஇளைஞரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னமனையை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வத்தின் மகன் மதன்(30) என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மதன் கூறியிருப்பதாவது:
ரமணியும் நானும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனால் ரமணியை திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் எனது பெற்றோர், ரமணி வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர். அதற்கு ரமணி பெற்றோர் எனது மகள் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்பவருக்கு எங்கள் மகளை தர விருப்பம் இல்லை என கூறி விட்டனர். இதனால் நான் நேற்று காலை 10.10 மணியளவில் ரமணி வேலைபார்க்கும் பள்ளிக்கு சென்று அவரை சந்தித்து பேசினேன். அதற்கு ரமணி எனது பெற்றோருக்கு இந்த திருமண விவகாரத்தில் விருப்பம் இல்லை. எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அவரை தான் நான் திருமணம் செய்ய உள்ளேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியை குத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கோவி.செழியன், எம்பி முரசொலி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இரவு 7மணிக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுஅப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மதனை போலீசார் நள்ளிரவு 12 மணிக்கு பேராவூரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசனின் பட்டுக்கோட்டையில் உள்ள இல்லத்தில் ஆஜர்படுத்தினர். மதனை வரும் டிச. 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதனை, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்நிலையில் ஆசிரியை குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆசிரியை ரமணியின் தாயார் முத்துராணியிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என்று ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.