தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது.
இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வராதது குறித்து எங்களுக்கு தெரியாது, என்றார்.