மதுரை: '2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்'
என குறிப்பிடப்பட்டது.இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது. 'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலர் நாகசுப்பிரமணியன், மாவட்ட செயலர் முருகன் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் என்றனர்.