Breaking News

"நெட்' தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - நவம்பர் 23 கடைசித் தேதி


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் "நெட்' தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேர்வுக்கு வருகிற 23}ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தேர்வுக்கானத் தேர்வு 2017 ஜனவரி 22 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (நவ.16) கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2016 ஜூன் மாத "நெட்' தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படாத காரணத்தால், அதில் தோல்வியடைபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வசதியாக டிசம்பர் மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 24 ஆம் தேதி வரை செலுத்த முடியும்.