வங்கி, தபால் அலுவலகங்களில் புதிய நோட்டு பெறலாம் :ஏராளமானோர் குவிவர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் :சனி, ஞாயிறும் வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு
மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.
சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி பொதுமக்கள்விரைந்தனர். ஆனால், பெரும்பாலானோரால் பணம் எடுக்க முடியவில்லை.அலைச்சல்
இந்நிலையில் நேற்று, ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். நுாறு ரூபாய் நோட்டுகளைத் தேடி, கடை கடையாக மக்கள் அலைந்தும், ஏமாற்றமே மிஞ்சியது.
பெரும்பாலான கடைக்காரர்கள்,500,1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில இடங்க ளில்,அவற்றை வாங்கினாலும், முழுத் தொகை க்கு பொருட்களை வாங்க கட்டாயப் படுத்தினர். இந்த புதிய அறிவிப்புபற்றி அறியாத ஏழை மக்கள், அடுத்து என்ன செய்வது எனக் கேட்டு அலைந்ததை பார்க்க, பரிதாபமாக இருந்தது.
இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். இதற்காக, போதுமான அளவிற்கு, புதிய கரன்சி நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வினியோகித்துள்ளது.பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன; போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.
ஆறுதல்
'இப்பிரச்னை தற்காலிகமானது தான். டிச., 30 வரை, நோட்டுகளை மாற்றலாம். டெபிட் கார்டு
பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
'இப்பிரச்னை தீர சிலநாட்கள் ஆகும் என்பதால், வழக்கமாக விடுமுறை தினங்களான,
இரண்டாவது சனி, ஞாயிறு அன்றும், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும்.
வங்கி ஏ.டி.எம்., மையங்களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை வரை செயல்படாது. அனைத்து, ஏ.டி.எம்., மைய பரிவர்த்தனைகளு க்கும், டிச., 30 வரை, கட்டணம் வசூலிக்கப் படாது என்பதும், பொதுமக்களுக்கு ஆறுதலான அறிவிப்பு.
ரிசர்வ் வங்கியில்உதவி மையம்
பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வது மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை, ரிசர்வ் வங்கி கிளையில்,உதவி மையம் செயல் பட துவங்கியுள்ளது. பொதுமக்கள், 044 - 2538 1390 மற்றும் 044 - 2538 1392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.