Breaking News

பொம்மலாட்டம் நடத்தி பாடம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்!!




தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் வாயிலாக, எளிய முறையில் கதை சொல்லி, கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சார்ந்த பல்வேறு பயிற்சிகள் நடத்துவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், ஐந்தாம் வகுப்பு வரை, மனப்பாட பகுதிகளை பாடலாக்குதல், அறிவியல் பாட செய்முறை பகுதிகள் அனிமேஷன் செய்தல், ஆங்கில எழுத்து உச்சரிப்பு குறித்த, குறுந்தகடு தயாரித்தல், என பல்வேறு திட்டங்களை, கல்வித்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப ரீதியில் கற்பித்தலை எளிமையாக்குவதால், மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

முதல் பருவத்தேர்வு முடிவடைந்ததால், பொம்மலாட்டம் மூலம், இரண்டாம் பருவப்பாடத்திட்டங்களை கற்பிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில, மாவட்ட, குறு மைய அளவில், பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி வெளியிட்ட அறிக்கையில், பொம்மலாட்டம் வாயிலாக கதை சொல்லி கற்பித்தல் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயாரிப்பு உள்ளிட்ட, பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

மாநில அளவிலான பயிற்சி, வரும் 18, 19 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவில், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்குமான கற்பித்தல் பயிற்சி, வரும் 27, 28 ஆகிய இரு தேதிகளில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது. இதில், தவறாமல் ஆசிரியர்கள் பங்கேற்பது அவசியம் என, தெரிவித்துள்ளார்