Breaking News

பள்ளிக்கு மது அருந்தி வந்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்


மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாக அரசு பள்ளி  மாணவர்கள் 8 பேர் மீது வந்த புகாரை அடுத்து, ஐந்து பேர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். திருப்பூர், ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்  நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்  படிக்கின்றனர்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு  வந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர் மது அருந்தி இருந்ததாக,  வகுப்பு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். மேலும்,  போதையில் இருந்த மாணவர்கள் வகுப்பறையில் வாந்தி எடுத்து அசுத்தம்  செய்ததோடு, கூச்சலிட்டும் பள்ளி வளாகத்தில் பட்டாசு வெடித்தும் ரகளையில்  ஈடுபட்டுள்ளனர்.


அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை  வரவழைத்து விசாரணை நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர், அனைவரையும் எச்சரித்து  அனுப்பியுள்ளார். ஆனால், இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன்  விசாரணை மேற்கொண்டு பள்ளிக்கு மது அருந்தி வந்த 5  மாணவர்களை 10 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த  மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடாமல்  தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர் சுசீந்திரன்  தெரிவித்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஏற்கனவே  மதுவால் தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மாணவர்கள் பள்ளி  நேரத்திலேயே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது என்றனர்.