Breaking News

அன்பாசிரியர் - கலைவாணி - குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்!


அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர்.
2016-ம் ஆண்டு ஜூலை மாதம். கோவை, காளம்பாளையைம் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்கள் பள்ளிக்கு சைல்டு ஹெல்ப் லைனில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவர்கள், ''கோவை ரயில் நிலையத்தில் ஒரு பள்ளிச்சிறுவன் நின்று கொண்டிருந்தான். நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. காளம்பாளையம் என்ற வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வந்தது. அதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 3 காளம்பாளைய பள்ளிகளையும் அழைத்துப்பேசினோம். உங்கள் பள்ளிதான் கடைசி'' என்றனர்.
அப்போது நான் தலைமை ஆசிரியர் அறையில் இருந்ததால், போனை வாங்கிப் பேசினேன். அடையாளம் கேட்டதற்கு அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடனே ஸ்பீக்கர் போடச் சொல்லி, ''என்ன கண்ணு பண்ற? எங்க இருக்க, உனக்கு என்ன வேணும்'' என்று கேட்டேன். 'கலைவாணி மிஸ்!' என்று என் பெயரைச் சொல்லி கதறினான் அந்தச் சிறுவன்.
சிறுவனின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டில் பணப் பிரச்சினை, நானும் சாகிறேன்; நீயும் செத்துத்தொலை என்று கூறியிருக்கிறார் அம்மா. கோபித்துக்கொண்டு மதுரையில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்லலாம் என்று ரயில் நிலையம் சென்றிருக்கிறான் அச்சிறுவன். ஆனால் எங்கிருந்து எப்படிப் போக வேண்டும் என்று தெரியவில்லை. தடுமாறி நின்றவனின் வாழ்க்கை, தடம் மாறிப்போக அத்தனை வழிகள். அடையாளம் அற்று நின்ற அச்சிறுவனைத் தேற்ற, ஊக்குவிக்க ஒரு கருவியாய் என் ஆசிரியப் பணி உதவியதை என்னுடைய 26 வருட ஆசிரியர் வாழ்க்கையின் ஆகச் சிறந்த தருணமாக எண்ணுகிறேன்'' என்று நெகிழ்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் கலைவாணி.
அவரின் ஆசிரியப் பணியும், பயணமும் இனி உங்களுக்காக...
''பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள் என்பதால், இயல்பாகவே அப்பணி மீது ஆர்வம் வந்தது. 1990-ல் சேலம், ஆனைப்பள்ளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கல்வி பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. தினசரி வேலை இல்லாத நாட்களில் மட்டுமே மாணவர்கள் வேலைக்கு வருவார்கள். பசிக்கக்கூடாது என்று காலையிலேயே கம்பு குடித்துவிட்டு வருவார்கள். மேல்சட்டை அணியமாட்டார்கள். தூய்மை, சுகாதாரம் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். பின்னர் கொஞ்சமாகப் பாடங்கள். மாணவர்களுக்கு பாடமாகக் கற்பிப்பதை விட பாட்டாகவும், கதையாகவும் சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருந்தது. 'புதுசா வந்துருக்கற டீச்சர் ஆடிப்பாடி சொல்லித் தர்றாங்களாம்' என்று பேச்சு பரவி, மாணவர்கள் அதிகமாக ஆரம்பித்தனர். இரு வருடங்களுக்குப் பிறகு, கோவை, தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறைக்கு மாற்றலானேன். நூற்றுக்கணக்கான சின்னக்குழந்தைகளைத் திறம்படக் கையாள என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
சிறந்த கையெழுத்துக்கு சிவப்பு ஸ்டார்
தேடித்தேடி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த முறைகளை ஞாபகக் கீற்றில் இருந்து தேடியெடுத்தேன். என் 3-ம் வகுப்பு ஸ்டெல்லா மிஸ், நன்றாக எழுதினால் சிவப்பு வண்ணத்தில் ஸ்டார் வழங்குவார். அதிக ஸ்டார் வாங்கியவர்களுக்கு சிவப்பு பேட்ச் பரிசு. தமிழ்க் கையெழுத்து வகுப்புக்கு அதையே நானும் பின்பற்றினேன். சில நாட்களுக்குப் பின், ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்குச் சென்றேன்.
பேருந்து ஓட்டுநர், 'சீக்கிரம் வந்துருங்க மிஸ்.. என் ரெண்டு பொண்ணுங்களும் உங்களுக்காகக் காத்துகிட்டு இருக்காங்க!' என்றார். சரிங்கண்ணா என்றுசொல்லி ஊர் போய்த் திரும்பி வந்து பார்த்தால், ஆச்சரியம் காத்திருந்தது. எல்லா மாணவர்களுமே ஒரு நாளில்கூட தவறாமல் எழுதியிருந்தனர். அப்போதுதான் நாம் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துவது எப்படி எனத் தெரிந்துகொண்டேன்.
பின்னர் என்.சி.ஆர்.டி. சார்பாக, சுதீப் சுக்லா என்னும் தன்னார்வலர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அங்கே குழந்தைகளின் உளவியலுக்கு ஏற்ப, ஒரு கருத்தைப் புரியவைக்க 3, 4 முறைகளில் கற்பிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட சில கருத்துகளை அறிந்துகொண்டேன். அக்கருத்தரங்கால் என் எண்ணங்கள் மாறின. குழந்தை படிக்கவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வந்தது. கல்வியின் தரத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தது அத்தருணத்தில்தான்.
2007-ல் பொள்ளாச்சி அருகே நரிக்குறவர் காலனிக்கு மாற்றல் ஆனேன். உயர் அதிகாரிகளிடம் இந்தப் பள்ளிக்கு எப்படிப் போகவேண்டும் எனக் கேட்டேன். 'பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செல்லுங்கள். ஊஞ்சவேலாம்பட்டியில் இருந்து வலப்பக்கம் திரும்பினால் ஒரு நாற்றம் கிளம்பும். எங்கே அதன் வீச்சு அதிகமாக இருக்கிறதோ அதுதான் நரிக்குறவர் காலனி' என்றனர். எதையும் யோசிக்காமல் சென்றேன். 25 தொகுப்பு வீடுகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது அந்த தொடக்கப் பள்ளி. சுற்றிலும் குப்பை, பிளாஸ்டிக் காகிதங்கள். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்.
நறுமணத் திரவியங்களோடு பாடம்
வீடு வீடாகச் சென்றேன். குழந்தைகளின் பெயரைக் கூப்பிட்டுக்கொண்டே சென்றேன். அவர்கள் பேன் தலையோடும், அழுக்கு உடைகளோடும் குளிக்காமலும் இருந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். மறுநாள் என் கணவரிடம் சொல்லி, கொஞ்சம் சோப்புகள், ஷாம்புகள், நறுமணத் திரவியங்களை வாங்கினேன். அவற்றை எடுத்துக்கொண்டு நரிக்குறவ வீடுகளின் அருகிலிருந்த தண்ணீர் பைப்புக்குச் சென்றேன். சென்ட் அடித்துக்கொண்டு நிற்பேன்.
அருகில் வருபவர்களிடம் எப்படி இருக்கு என்று கேட்பேன். எல்லோரும் கோரஸாக, ஜம்முன்னு இருக்கு டீச்சர்! என்பார்கள். உடனே நீங்களும் போட்டுக்கிட்டா இப்படித்தான் இருக்கும் என்பேன். உடனே சரியென்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாற ஆரம்பித்தார்கள். நரிக்குறவர்கள் வீடுகளில் இருந்த இளைஞர்களைக் கூப்பிட்டு சுயமுன்னேற்றம் குறித்துப் பேசினேன். யாருடைய வீடுகளின் முன்னால் குப்பையில்லாமல், சுத்தமாக இருக்கிறதோ அவர்களுக்கு பாசிமணி, வளையல்களைப் பரிசாக அளித்தேன். ஆண்களுக்கு ஷூக்கள். வாரமொருமுறை சுகாதாரம் குறித்த வகுப்புகள் எடுக்கப்பட்டன. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. கற்றல் உபகரணங்கள் வாங்கப்பட்டன.
தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ள பள்ளி | காகிதத்தில் கலைப்பொருட்கள் செய்யும் மாணவிகள்
நரிக்குறவர் மாணவர்கள், எல்லோரையும்விட 1000 மடங்கு புத்திசாலிகளாக இருந்தார்கள். மனக்கணக்கில் அவர்களுடன் யாருமே போட்டி போடமுடியவில்லை. ஆனாலும் அவர்கள் 5-ம் வகுப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தார்கள். நம்மைவிட, அவர்கள் இனத்திலேயே படிப்பால் உயர்ந்தவர்கள், சொன்னால் கேட்பார்கள் என்று தோன்றியது. கடும் முயற்சிக்குப் பின்னர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த வழக்கறிஞரைக் கூட்டிக்கொண்டு வந்தேன். அவரும் பேச ஒப்புக்கொண்டு வந்தார். அவர் சாதாரண வார்த்தைகளால் பேசும்போது நரிக்குறவர் மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் இன மொழியிலேயே பேசியபோது கரகோஷம் வானைப் பிளந்தது. அடுத்தடுத்த நாட்களில் அவர்களிடத்தில் பெரிய மாற்றத்தைக் கண்டேன்.
பின்னர் கோவை, காளம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றல் கிடைத்தது. அங்கேயும் அனுபவமிக்க ஆசிரியர்கள், சிறந்த ஆசான்களின் வழிமுறைகளைக் கையாண்டேன். வாட்ஸ்- அப் குழுக்களில் ஆசிரியர்கள் பகிரும் விஷயங்களைப் பள்ளியில் செய்ய ஆரம்பித்தோம். இங்கு எல்லாமே கொட்டிக்கிடக்கிறது. அதில் நமக்குத் தேவையானதைப் பொறுக்கியெடுத்தால் போதும் என நினைக்கிறேன்.
பழைய போன்களின் வழியாக ஆங்கில இலக்கணம்
நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பழைய ஆன்ட்ராய்டு போன்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். 7, 8 போன்கள் கிடைத்தன. அவையனைத்திலும் ஆங்கில இலக்கண செயலிகளைப் பதிவிறக்கினேன். அவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆர்வமாய் அவர்கள் கற்க, தினமும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்.
ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் உதவியால், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்குகள், 35 ஆயிரம் மதிப்பில் வாஷ்பேசின் ஆகியவற்றை அமைத்திருக்கிறோம். முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வாங்கிக்கொடுத்துள்ளனர். எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 3 கணினிகள், 24 வட்ட மேசைகள், 120 இருக்கைகளை வாங்கியுள்ளோம். 7,8 -ம் வகுப்பு மாணவர்களுக்கு புற, அக அழகுகள் குறித்த வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஓட்டுக் கட்டிடமாக இருந்தாலும், பள்ளியை சுத்தமாக வைத்திருக்கிறோம்.
பள்ளியில் கராத்தே, யோகா உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளை எடுக்கவுள்ளோம். எங்கள் பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கவேண்டும் என்று ஆசை. அதன்மூலம் மாணவர்களின் கற்றல், உச்சரித்தல், புரிதல் திறனை மேம்படுத்த வேண்டும். எந்தப் பிரச்சனையையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலே போதும். குழந்தைகள் அவர்களாகவே உயர்வார்கள்.
ஆசிரியர்கள் 100 சதவீத உழைப்பு, தியாகம் இவற்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. செய்யும் வேலைக்கு உரிய உழைப்பைக் கொடுத்தால் மட்டும் போதும். இது எல்லோருக்குமே பொருந்தும். ஆசிரியப் பணியில் கிடைக்கும் மிகப்பெரிய மரியாதை, கவுரவம், பெருமை, திருப்தி வேறெதில் கிடைத்துவிடப் போகிறது? சமூக மாற்றத்தையே உருவாக்க முடியும் என்று நரிக்குறவர் காலனி கற்றுத்தந்தது. வருடாவருடம் சமூகப் பொறுப்புள்ள 25 குழந்தைகளையாவது உருவாக்குகிறோம் என்பதில்தான் என்னுடைய 26 வருட ஆசிரியப் பணியும், மொத்த வாழ்க்கையுமே அடங்கியிருக்கிறது'' சொல்லி முடிக்கும் அன்பாசிரியர் கலைவாணியின் வார்த்தைகளில் பெருமிதம்.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ஆசிரியர் கலைவாணியின் தொடர்பு எண்: 9842289744