Breaking News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு  போராட்டம் நடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை திருநகர் ஞானஒளி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (44), இவர், ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த வாரம் ஜெயபிரகாஷ் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
 அப்போது, அந்த மாணவி ஆசிரியரின் கையை தட்டி விட்டு ஓடி வந்துள்ளார்.அதன் பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அந்த மாணவி அழுது கொண்டே இருந்துள்ளார்.  இதை பார்த்து சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது சம்பவம் பற்றி மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜெயபிரகாஷிடம் விசாரணை நடத்தினர். 
அதில், ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது நிரூபணமானது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி எதிரே திரண்டு, கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் என திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் ஜாபர்கான் பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவிகள் கூறுகையில், ‘‘நாங்கள் இந்த பள்ளியில் தான் 5ம் வகுப்பு முதல் படித்தோம். 
* மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர் கடுமையாக உழைப்பவர். 13 ஆண்டுகளாக அவர் இந்த பள்ளில் பணியாற்றி வருகிறார். 
* அவர் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.