Breaking News

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்


திருப்பூரில் பள்ளி ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். திருப்பூர், வீரபாண்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பின்னலாடைத் தொழிலாளர் ஒருவரது மகன் படித்து வந்தார். அவரது வகுப்பு ஆசிரியை கடந்த 23-ஆம் தேதி வணிகவியல் பாடம் எடுத்துள்ளார். அப்போது, அந்த மாணவர் பாடத்தை நோட்டு புத்தகத்தில் எழுதாமல், பேப்பர் வைத்து எழுதியுள்ளார். இதைக் கவனித்த ஆசிரியை, மாணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். மாணவர் நோட்டு புத்தகத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவரது பதிலில் அதிருப்தியடைந்த ஆசிரியை, மாணவரை அடித்ததாகவும், அப்போது திடீரென அந்த மாணவர் பதிலுக்கு ஆசிரியை கன்னத்தில் இருமுறை அறைந்ததாகவும், இதில் ஆசிரியை அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து சேதமானதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் பள்ளி தலைமையாசிரியை மூலம் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு கல்வித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய விசாரணையில், மாணவர் தவறை ஒப்புக் கொண்டதால், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் கூறியதாவது:

சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆசிரியை தன்னை அடித்த காரணத்தால், அதை தடுத்தபோது தவறுதலாக தனது கை ஆசிரியை மீது பட்டுவிட்டது என்று மாணவர் விளக்கமளித்தார் என்றனர்.