Breaking News

உறுப்பினர் செயலர் பதவியில் குளறுபடி : உயிர் பெறுமா உயர் கல்வி மன்றம்?


மாநில உயர் கல்வி மன்றத்தில், யார் தலைமை அதிகாரி என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதால், திட்டங் கள் முடங்கியுள்ளன. அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புதுமையான திட்டங்களை கொண்டு வருதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை, உயர் கல்வி மன்றம் செய்து வருகிறது.


இதன் தலைவராக, உயர் கல்வி அமைச்சரும், துணைத் தலைவராக, உயர் கல்வி செயலரும் உள்ளனர். மன்றத்தை செயல்படுத்தும் பொறுப்பு, உறுப்பினர் செயலரிடம் உள்ளது.
இந்த பொறுப்பில் இருந்த நாகராஜன், ஓராண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினர் செயலர் நியமிக்கப்படவில்லை. பல கோடி ரூபாயில், திட்டங்களை நிறைவேற்றும் இந்த மன்றத்தில், உறுப்பினர் செயலர் பொறுப்புக்கு கடும் போட்டி உள்ளதால், அதிகாரிகளுக்கு, உறுப்பினர் செயலர் பொறுப்பை கூடுதலாக வழங்கி, உயர் கல்வித் துறை சமாளித்து வருகிறது.
ஜூலை மாதம் வரை, கல்லுாரி கல்வி இயக்குனராக இருந்த சேகர், உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலராக கூடுதல் பொறுப்பில் இருந்தார். அவர் இணை இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டதால், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மதுமதிக்கு, கூடுதலாக, கல்லுாரி கல்வி
இயக்குனர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதனால், இருவரில் யார் தற்போதைய உறுப்பினர் செயலர் என்ற குழப்பத்தால், மன்றத் தின் பணிகள் முடங்கி உள்ளன. எனவே, துணைவேந்தருக்கு இணையான பொறுப்பாக கருதப்படும் உறுப்பினர் செயலர் பொறுப்பில், தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.