Breaking News

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 


கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாக மாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது.