மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புரொஜெக்டர், கணினி ஸ்கிரீன், இன்டர்நெட், 'பவர் பாயின்ட்' போன்ற வசதியுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மத்திய அரசு நிதியுதவிடன் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் 'மெய்நிகர் கற்றல்' வகுப்பறைகள் தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன
முதற்கட்டமாக 770 பள்ளிகள், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) இவ்வகுப்பறைகளை அமைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) ஈடுபட்டுள்ளது. இவ்வகுப்பறையில் ஹார்டுவேர் கணினி, வெப் ேகமரா, புரொஜெக்டர், மெகா ஸ்கிரீன், நவீன ஆடியோ சிஸ்டம், அதி விரைவு இன்டர்நெட் இணைப்பு, பிரத்யேக மென்பொருள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் இவ்வகுப்பறை வசதி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தவும், பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சிறப்பு வல்லுனர்கள் பயிற்சி வகுப்பு நடத்தவும் பயன்படுத்தப்படும். மேலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடங்கள் தொடர்பாக எஸ்.சி.இ.ஆர்.டி., தொகுத்துள்ள 200க்கும் மேற்பட்ட வீடியோ தொகுப்புகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக 'இருதயம்' பாடம் என்றால் அதன் அமைப்பு, செயல்பாடு குறித்து 'யூ டியூப்' வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, முக்கிய இடங்கள், அனிமேஷன் கலந்த காட்சி தொகுப்பு வீடியோக்களையும் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ளது. இவை மெய்நிகர் கற்றல் வகுப்பறையில் மாணவர்களுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன தொழில் நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்களும் தெரிந்துகொள்ள 'வெர்சுவல்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். தேர்வு நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். இவ்வகுப்புகளில் கற்றல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டில்லி 'எர்னட்' மற்றும் 'ரிக்கோ' நிறுவனம் சார்பில் ஆக., 4 முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, என்றார்.