Breaking News

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.


மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.


இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.