தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.
25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. இதில் பதியப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும். உரிய ஆதாரங்கள், குடியிருப்பு சரியாக இருந்தால் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வாக்களித்துகொள்ளலாம். எனவே இளம் வாக்காளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகளுடன், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போய் இருந்தாலோ, டேமேஜ் ஆக இருந்தாலோ பணம் கட்டி மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கான பணிகள் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில் தகுதியான வாக்காளர்கள் இச்சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் வாக்காளர் சேவை மையம் மூலமாக தகுதியான வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர்பட்டியலில் திருத்தம், முகவரிமாற்றம், உள்ளிட்டவைகள் செய்து சேர்த்துகொள்ள இன்னும் 4 தினங்களே உள்ளன' என்றனர்