பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வர்களுக்கு கோபி கல்வி மாவட்ட அலுவலகத்தில் வினா வங்கித் தீர்வுப் புத்தகம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கோபி கல்வி மாவட்டத்தில், இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 196 பள்ளிகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 4 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 103 பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 738 மாணவர்களும் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் வினா வங்கித் தீர்வுப் புத்தகம் குறைந்த விலையில் மாவட்டம் வாரியாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டத்தை ஒருங்கிணைத்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினா வங்கித் தொகுப்புப் புத்தகம் பெறும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உயிரியல் பாடங்களுக்கான புத்தகங்கள் வந்துள்ளன. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத் தீர்வுப் புத்தகம் மட்டும் வந்துள்ளது.
கரட்டடிபாளையம் - லக்கம்பட்டி சாலையில் உள்ள கோபி கல்வி மாவட்ட அலுவலகத்தில் தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை உரிய தொகை செலுத்தி வினா வங்கித் தீர்வுப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.