Breaking News

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்



தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 
தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். 
ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். 
'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.