ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது என்று தொலை தொடர்பு துறை விளக்கம்
அளித்துள்ளது.
அனைத்து வகை சேவைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை
எடுத்து வருகிறது.
இதுவரை வங்கி கணக்குகள், பான் எண், குடும்ப அட்டை, டிரைவிங் லைசென்சு
ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த நிலையில் செல்போனுக்கான சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க
வேண்டும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘‘லோக்நிதி’’ எனும்
தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிம்கார்டு
பெற ஆதார் எண் அவசியம் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும்
என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பால் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் மக்களுக்கு
முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக தொலை தொடர்பு துறை புதிய விளக்கம்
ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த
காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது’’ என்று கூறியுள்ளது.
மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா இது பற்றி கூறுகையில்,
‘‘மக்களுக்கு புதிய செல்போன் இணைப்புகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும் என்பதே லட்சியமாகும்.
இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம் அல்ல. என்றாலும் போன் இணைப்புகள்
முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார்.