தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய
பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.
இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.