'நடுநிலைப் பள்ளி வரை, பள்ளி வேலை நாள், 210 நாட்களாக குறைக்கப்படவுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லுாரியில், இதய நிறைவு தியான பயிற்சி விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு பின், நீங்கள் வியக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறையில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.எதிர்காலத்தில், நீங்கள்எதை சந்திக்க வேண்டுமோ, அதை சந்திக்கும் திறமை, உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறது. 'நீட்' தேர்வு கொள்கையில், அரசுக்கு மாற்றமில்லை.
தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில், அரசு உறுதியாக இருக்கிறது. பிளஸ் 1 தேர்வு குறித்து, நீங்கள் கவலைப்பட தேவையில்லை.சிறந்த கல்வியாளர்களாக உங்களை உருவாக்க, பல்வேறு பயிற்சிகள் அளிக்க, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 450 இடங்களில் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நடுநிலைப்பள்ளி வரை, 220 நாட்கள் பள்ளி நாட்களாக உள்ளது.
அதை, 210 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதய நிறைவு தியான பயிற்சியில், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 31 பள்ளிகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கலெக்டர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்களுடன் சேர்ந்து, தியானத்தில் ஈடுபட்டனர்.'அனைவரும் தேடி வருவர்'''பள்ளிக் கல்வியை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரே ஆண்டில், அனைவரும் அரசு பள்ளிகளை தேடி வருவர்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.பழநி முருகன் மலைக்கோவிலில், சாயரட்சை பூஜையில், சுவாமி தரிசனம் செய்த பின், அவர் கூறியதாவது:அரசு ஊழியர் குழந்தைகள் உட்பட அனைவரும், இன்னும் ஓராண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் சூழ்நிலை ஏற்படும். அரசு பள்ளிகள் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.