அலுவலகரீதியாக எடுக்கப்படும் முடிவுகளையும், முக்கியத் தகவல்களையும் சமூக வலைதளங்களில் விவாதிக்க வேண்டாம் என்று வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வரிவிதிப்பு வாரியத்தின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, ஊடகங்களில் அவை கசிவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நடத்தும் பல்வேறு கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் வருமான வரித் துறை அதிகாரிகள், அதுதொடர்பான தகவல்களையும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும், சக ஊழியர்களுடன் "வாட்ஸ் அப்', சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாக விவாதிப்பதாகத் தெரிகிறது.
இதனால், பல்வேறு எதிர்விளைவுகள் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மண்டல வருமான வரித் துறைக்கும் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
வரிவிதிப்பு வாரியக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் விஷயங்களை முறைப்படி சமூக வலைதளங்களில் பதிவிட குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர்த்து பிற அதிகாரிகள் எவரும் அலுவலகரீதியான தகவல்களை பொதுத் தளங்களில் பகிரக் கூடாது. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் ஒப்புதலின்றி சமூக வலைதளங்களில் எந்தவிதமான அலுவலக முடிவுகளையும் விவாதிப்பதற்கு அனுமதியில்லை என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய குடிமைப் பணிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே, இதேபோன்ற அறிவுறுத்தல்களை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.