வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் அவையில் தற்போதைய பொதுச்செயலாளராக
தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு வகிக்கும் பான் கி மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், போர்ச்சுகலின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் நேற்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9-வது பொதுச் செயலாளராக குத்தோரஸிற்கு, பான் -கி-மூன் பதவியேற்பு செய்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமையின் தலைவராகப் பதவி வகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை பதவி வகிப்பார்.