சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புயலால் 3400 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளனர். இதனால் சென்னை நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. புயல் கரையைக் கடந்தாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 12 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வர்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்தால் மெரீனா, பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
புயலால் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 8,000 பேர் பாதுகாப்பாக 54 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புயலால் 3400 மின்கம்பங்கள் விழுந்துள்ளதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.
மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் 4000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்த போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்யாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.