Breaking News

Vikatan முக்கிய செய்திகள் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?



தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். `இது எந்த வகையில் நியாயம்?' என, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில், அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் காலியாக உள்ள 1,883 பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்காக ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும், ஜூலை மாதத்தில் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை எதன் அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தனியார் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் செல்வகுமார், ``மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியராகச் செயல்பட, ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்/டெட்) தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமித்து வருகிறது தமிழக அரசு. ஆனால், அரசு கலைக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் உதவி பேராசிரியர் பணிக்கு எந்தவித தகுதித் தேர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், கடந்த 25 வருடங்களாக யூஜிசி மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.
மற்ற மாநிலங்களில் யூஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்கும்போது, தமிழகத்தில் மட்டும் நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், தங்களுக்குச் சாதகமான விதிமுறையைப் பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமித்துவருகிறார்கள். ஒருமுறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லும்போது, விண்ணப்பம் செய்பவர்களே ஆராய்ச்சி இதழை ஆரம்பித்து அதில் கட்டுரைகளை வெளியிட்டதாக கணக்கு காண்பித்தும், புத்தகங்களை வெளியிடாமலேயே `புத்தகங்களை வெளியிட்டோம்' என்று சொல்லி அதிக மதிப்பெண் பெற்று வேலைக்குச் சேர்ந்துவிடுகின்றனர்.
பலரும் பணி அனுபவத்தையும், பகுதி நேரத்தில் பெற்ற முனைவர் பட்டத்தையும் வைத்து தனித்தனியே மதிப்பெண்ணைப் பெற்று வேலையில் சேர்கின்றனர். இதனால் முழு நேர ஆய்வுப்பணி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்கள் கடைசிவரை அரசு கலைக் கல்லூரியில் வேலை பெற முடிவதில்லை. இதைத் தடுக்கும் வகையில், பகுதி நேரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்கலாம் அல்லது முனைவர் பட்டத்துக்கு என்று மதிப்பெண் வழங்க வேண்டும்" என்றார்.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பைப் பெற்று, தற்போது அரசுக் கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர் ராஜாசிங், ``பணி நியமனம் செய்யும்போது நடத்தப்படும் நேர்முகத்தேர்வு நேர்மையாக நடத்த வேண்டும். நேர்முகத்தேர்வுக் குழுவில் இருப்போர்க்கு வேண்டியவர்களாக இருந்தால் எளிமையான வகையில் கேள்விகளும், மற்றவர்களுக்குக் கடினமான வகையில் கேள்விகள் கேட்கப்படுவதும் நடக்கின்றன. இந்த வேறுபாட்டை களையும் வகையில், என்னென்ன பிரிவிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்பித்தல் முறை, பாடத்திட்டம், பணி அனுபவம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள், மாணவர் உளவியல் என்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கலாம். நேர்முகத்தேர்வில் பென்சில் மூலம் மதிப்பெண் போட்டுவிட்டு பிறகு மாற்றும் முறையையும் ஒழிக்கப்பட வேண்டும்.
பகுதி நேரத்தில் பணியாற்றியிருப்பவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதும், முழு நேர ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதையும் மாற்றியமைக்க வேண்டும். நெட் மற்றும் செட் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். முதுநிலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருந்தால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைக்கும் என்றால், செட்/ நெட் தகுதித் தேர்வை நடத்தவேண்டிய அவசியமில்லை. சரியான விதிமுறையைக் கடைப்பிடிக்கும்போது மட்டுமே உயர்கல்வி மேம்படும்" என்றார்.


முனைவர் செல்வகுமார், ``ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது 34 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில் ஏழரை ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு 15முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் எனப் பிரித்து தனித்தனியே வழங்கப்படுகிறது.
இதில் செட்/நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருந்தால் இரண்டுக்குமான மதிப்பெண்ணையும் சேர்த்து (9+6=15) வழங்க வேண்டும். அனுபவத்தைக் கணக்கிடும்போது, முனைவர் பட்டம் பெற்ற பிறகு அல்லது நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு எவ்வளவு வருடம் பணியாற்றியிருக்கிறார்களோ அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டும், முழுநேர ஆய்வுப் பணியை மேற்கொண்டவர்களுக்கும், பகுதி நேரத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் வேறுபடுத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். இதைப்போலவே, பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்லூரியை நடத்துபவர்களே ஆசிரியர்களை நியமித்துக்கொள்கின்றனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளை நடத்தவும், கல்லூரியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் அரசே சம்பளம் வழங்கும் நிலையில், கல்லூரிப் பேராசிரியர்களை மட்டும் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ளலாம் என்பது நியாயமற்ற செயல். இதையும் அரசு கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 16 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் பொதுவான ஒரு விதிமுறையை வகுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்றார் செல்வகுமார்.
விதிமுறைகளைத் தெளிவாக வகுத்து தமிழக அரசு கல்லூரி பேராசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இதை அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் தொடரும் வகையில் தேர்வுசெய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்குமா உயர்கல்வித் துறை?