Breaking News

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு



அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கென தனியே சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தேர்தல் வரும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை, சங்க நிர்வாகிகள் சந்தித்து, கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். தேர்தல் முடிந்ததும், ஆட்சிக்கு வரும் கட்சியின் தலைவர்களுக்கு, சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கும்.இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு சாதகமாக செயல்படும் ஆசிரியர்களால், அரசு நிர்வாகத்தின் ரகசியங்கள், கட்சி தலைவர்களுக்கு கசிவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துஉள்ளன. இதனால், சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.இதன் ஒரு கட்டமாக, 2014 பார்லிமென்ட் தேர்தலில், தி.மு..,வுக்கு ஆதரவு அளித்ததாக கூறி, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டு, கல்வித் துறை அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு, ராஜ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தலில் கட்சி தலைவர்களை சந்தித்த ஆசிரியர்கள் குறித்தும் வெளியான செய்திகளையும், கல்வித் துறையிடம் கடிதமாக கொடுத்து, தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதா என, கேட்டுள்ளார்.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றும் செயல்படும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டியல் வந்ததும், அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். அந்த விளக்கத்திற்கு பின், அவற்றில் விதிமீறல் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்