பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணியில்
ஈடுபட்டபோது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இன்றைக்கு 4வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வந்தது. நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர் போராட்டம் நடைபெறும் நிலையிலும் நிறைவேற்றப்படாததால் பிரதமர் வரும் சாலையில் மறியல் செய்வோம் என்று ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது அறிவித்திருந்தனர். இதனையடுத்து இன்றைய போராட்டம், பிரதமர் அவர்கள் விழாவில் கலந்துகொள்ளவுள்ள கலைவாணர் அரங்கம் அருகிலேயே நடைபெற்று வந்தது.
இந்த
போராட்டம் போலீசாருக்கு பெரும் சிக்கலாக மாறியது. காலையில் இருந்தே பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பகுதிகளில் ஆட்கள் யாரும் நடமாட முடியாத அளவுக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனாலும் அனுமதியில்லாமல் காலை 10.30 மணியில் இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களிடம் பல கட்டமாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எவ்வித பலனும் இல்லை. பிரதமர் வரும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். பெண்கள் அதிகளவில் இருந்ததால் காவல்துறையினர் என்ன செய்வதென்று அறியாது திகைத்தக்கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பேரணியாக கோட்டையை நோக்கி பேரணி செல்ல முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.