Breaking News

நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை


தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
விதித்து உத்தரவிட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டின் கிளையின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய - மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.