ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34
ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்; இரண்டாம் தாள் எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வு செய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்' தேர்வு அறிமுகமான போது 7.14 லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன் துணை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62 லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில், தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.