மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது. கரூர் பஸ் நிலையத்தில், 17 வயது பள்ளி மாணவன், பள்ளி சீருடையுடன் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், அந்த மாணவன் படம் வெளியானதால், மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மாணவனின் எதிர்காலம் கருதி, அவனுக்கு கவுன்சிலிங் அளிக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச் செல்வி, நன்னடத்தை அலுவலர் கணேசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மஞ்சு, அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மாள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து, 'கவுன்சிலிங்' வழங்கினர். அவர்கள் அளித்த உத்தரவாதத்தின் பேரில், மாணவனை மீண்டும், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.