Breaking News

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

 மிழகத்தில் டெட் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி, சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

 2026-ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் (TET - ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்களுக்குச் சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணையை இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

பணியில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு (Review Petition) தற்போது நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்களின் பணி நிலை குறித்துக் கேள்விக்குறி எழுந்தது.

இந்தச் சூழ்நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு உதவும் விதமாக, தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு டெட் தேர்வுகளை நடத்துவதற்கான அனுமதியை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது

மேலும், இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் தாக்கத்திலிருந்து ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையிலும், அதே சமயம் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்கும் வகையிலும் தமிழக அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.