Breaking News

2025ஆம் ஆண்டு முதல் அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

 ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறைகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு அரசும் வருகின்ற 2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.


இதனை அடிப்படையாகக் கொண்டு, '2025 ஆண்டிலிருந்து அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக' தகவல் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?

பரப்பப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, 2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணையை சோதித்தபோது, "தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 2025 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை" என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.


இதே போல், 2024ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணையை சோதித்ததில், அதிலும் "தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 2024 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

2022ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகள் குறித்த அரசாணையிலும் கூட, "ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை" என்றே குறிப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.


இதிலிருந்து, ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக ஒன்றுதான் என்பதும், 2025 ஆம் ஆண்டிலும் அவ்வாறு அறிவிக்கப்படுவது புதிதான ஒன்றல்ல என்பதும் தெளிவாகிறது.

முடிவு:

2025 ஆண்டிலிருந்து அனைத்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக திரித்துப் பரப்பப்படுகிறது. இவ்வாறு அனைத்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது வழமையான ஒன்றுதான்.