நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடையே யார் அதிகளவிலான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என்ற விபரீத விளையாட்டு எண்ணம் உருவானது. தொடர்ந்து ஒவ்வொரு மாணவியும் தன்னால்தான் முடியும் என்றுக்கூறி சாக்லேட் சாப்பிடுவதுபோல் அதிகளவில் மாத்திரைகளை போட்டி போட்டு சாப்பிட்டனர். இதனால் வகுப்பறையில் 4 மாணவிகள் மயக்கம் வருவதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த சகமாணவிகள், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து என்ன நடந்தது என்று கேட்டு மாணவிகளை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு மாணவி தற்போது உயிரிழந்துள்ளார். அதனால் உதகை நகராட்சி உருது பள்ளி தலைமையாசிரியர் முகமது அமீன் ஆசிரியை கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.