Breaking News

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைய ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்: கல்வியாளர்கள் காட்டம்!




அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் போனதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட
தவறவிட்டதாக நாகை மாவட்ட கல்வி ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் 17 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அதில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாகவே இருக்கின்றன, ஆங்கிலம், கணிதம், உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுக்கான ஆசிரியர்களே இல்லாமல் போனதால், தேர்ச்சியின் விகிதம் குறைந்துவிடுகிறது.
அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கை மற்றும் நூறு சதவீத தேர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டாலும் இலக்கை எட்டமுடியாமல் போகிறது.
வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 295 மாணவ, மாணவியரில் ஒரு மாணவி மட்டும் தோல்வியடைந்தார். ஆனாலும் இப்பள்ளி 99.6 சதவீத தேர்ச்சியே பெற முடிந்தது. அந்த பள்ளியில் இயற்பியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 7 ஆண்டுகளாகவும், தமிழாசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பணியிடங்கள் 4 ஆண்டுகளாகவும் காலியாகவே உள்ளன. அந்த இடங்களுக்கான ஆசிரியர் பணியை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமிக்கும் ஆசிரியர்களே ஈடுசெய்கின்றனர்.
இதேபோல், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 244 மாணவ, மாணவியரில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பாடப் பிரிவுகளில் படித்த 2 மாணவிகள் தேர்ச்சிப் பெறவில்லை. இதனால், இப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 97-ஆக உள்ளது.மேலும் தமிழ், ஆங்கிலம், இயற்பியலுக்கான ஆசிரியர் பணியிடங்களும் இப்பள்ளியில் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படவில்லை.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 234 பேரில் 6 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், 97.4 சதவீத தேர்ச்சியே பெற முடிந்தது. அங்கு வரலாறு, தமிழ், பொருளாதாரப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக இருக்கிறது.
வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 149 மாணவர்களில் 140 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94 ஆகும். தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 93 சதவீதத்தினரும், வேதாரண்யம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 95.7 சதவீதத்தினரும், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 92 சதவீதத்தினரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
ஆக அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் பற்றாக்குறையே என்கிறார்கள் அங்குள்ள ஆசியிரியர்கள்.