Breaking News

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு


Click here-Letter No. 17977 Dt: April 16, 2018 -OFFICIAL COMMITTEE, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Arrears on retirement benefits in respect of employees who retired between 1 1 2016 and 30 9 2017 – Payment of Second Instalment – Drawal of - Instructions – Issued

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு
தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும்.
இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.
முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.