Breaking News

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனசென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி இலவசமாக செய்து தரப்படும்.இவ்விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பள்ளி விடுதிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரது பெயரில் தேசிய உடமை ஆக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டதற்கான வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் பள்ளி மாணவ, மாணவியர் ஜூன் 19-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 14-ம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.