Breaking News

ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.



அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது: மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

பணியிடங்களில் ஆசிரியர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதையடுத்து, ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க உள்ளன.